

சேலம்: ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிந்ததை கொண்டாடும் விதமாக, மாணவர்கள் நாட்டு வெடிகளை பள்ளி நுழைவாயிலில் வெடித்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு முடிந்ததை அடுத்து, ஆட்டம் பாட்டத்துடன் பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியே வந்தனர். இதில் சில மாணவர்கள் பள்ளியின் நுழைவுப் பகுதியில் இருபுறமும் நாட்டு வெடிகள் கயிற்றில் கட்டி வெடித்து, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசால் தடை செய்யப்பட்டுள்ள நாட்டு வெடிகளை பயன்படுத்துவது, விற்பனை செய்வது சட்டத்துக்கு புறம்பானதாகும். இதுபோன்ற சூழ்நிலையில், பள்ளியில் பயிலும் மாணவர்கள் நாட்டு வெடிகளை வாங்கி வந்து, பள்ளி வளாகத்தில் வெடித்ததோடுமட்டுமல்லாமல், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். பள்ளியில் பயிலும் மாணவர்கள் நாட்டு வெடி வெடித்து, பிளஸ் 1 தேர்வு முடிவை கொண்டாடிய வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இச்சம்பவம் நடைபெற்றபோது பள்ளியில் தேர்வு மையத்தில் உள்ள போலீஸா்ர, ஆசிரியர்கள் வெடிகள் வெடித்து முடித்த பின்பு அப்பகுதிக்குச் சென்று நெருப்பை அணைத்து, நாட்டு வெடி கட்டப்பட்ட கயிற்றை அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீஸார் கவனத்துக்கு சென்ற நிலையில், பள்ளி வளாகத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகளை பறிமுதல் செய்து, வெடி விற்றவர்கள் குறித்தும், வாங்கி பயன்படுத்திய மாணவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.