

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தங்கள் தொகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்று நத்தம் விஸ்வநாதன் (நத்தம்), செல்லூர் ராஜு (மதுரை மேற்கு), கு.பிச்சாண்டி (கீழ்ப்பெண்ணாத்தூர்) ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இவற்றுக்குப் பதில் அளித்து அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் உள்ள 16,201 இடங்களில், 9,108 இடங்கள் நிரம்பவில்லை. அதேபோல, நத்தம் தொகுதியில் 1,643 இடங்களில் 708 இடங்கள்நிரம்பவில்லை. எனினும், கல்லூரிகளே இல்லாத தொகுதியில், புதிய கல்லூரி தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று பார்க்காமல், நிதிநிலைக்கேற்ப படிப்படியாக கல்லூரிகள் தொடங்கப்படும்.
முதல்வர் ஏற்கெனவே அறிவித்தபடி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளித்த 10 கோரிக்கைகளில், 46 உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் கலை, அறிவியல் கல்லூரிகளை அமைக்குமாறு கேட்டுள்ளனர். இதில் 26 உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளில் அரசு, கலை அறிவியல் கல்லூரிகளே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தேவை அடிப்படையில் கல்லூரிகள் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.