

சென்னை: தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுப்பது தொடர்பாக மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: காவிரிப் படுகை மாவட்டங்களில் நெல் விளையும் பூமியை நாசமாக்கி, பாலைவனப் பகுதியாக மாற்ற முனையும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. இதற்கு எதிரானப் போராட்டங்கள் எரிமலையாக வெடிக்கும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திக தலைவர் கி.வீரமணி: டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 8-ம் தேதி தஞ்சையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் (பொறுப்பு) பி.எஸ்.மாசிலாமணி: மத்திய அரசின் இந்த பொறுப்பற்றச் செயலை, மக்களைப் பற்றிக் கவலைப்படாத போக்கை தமிழக விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. இந்த திட்டத்தை தொடக்க நிலையிலேயே மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகளில் சுரங்கம் தோண்டுவது ஏற்கத்தக்கதல்ல. இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
அண்ணாமலை வலியுறுத்தல்: மத்திய வெளியுறவுத் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அகர்வாலிடம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நிலக்கரி சுரங்கம் திட்டத்தால் நிலத்தடி நீரின் தரம் குறைந்து விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், மீத்தேன் எடுப்பதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, தங்கள் அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட நிலக்கரி ஏல டெண்டரில் இருந்து கிழக்கு சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய பகுதிகளை நீக்கிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.