

சென்னை: சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று வேளாண்மை, உழவர் நலத் துறை, கால்நடைப் பராமரிப்பு, பால் வளம், மீன்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சா.மு.நாசர் பேசியதாவது:
கலைஞர் சங்கப் பணியாளர்கள் நல நிதி உருவாக்கப்பட்டு, தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்படும். இதன்மூலம் சங்கப் பணியாளர் விபத்தில் இறந்தால், ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இரண்டு குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக தலா ரூ.25 ஆயிரம், திருமண உதவித்தொகையாக தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.
ஆவின் பால் பண்ணைகளில் பால் பாக்கெட்டுகள் தயாரிக்க ரூ.30 கோடியில் தானியங்கி இயந்திரம் நிறுவப்படும். எருமை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், எருமைக் கன்று வளர்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மாதாந்திர பால் அட்டை விற்பனை மற்றும் புதுப்பிக்கும் பணி கணினிமயமாக்கப்படும். பால் உற்பத்தியை மேம்படுத்த, தமிழ்நாடு பால் உற்பத்தி மேலாண்மைக் கொள்கை உருவாக்கப்படும். பால் கூட்டுறவு சங்கங்கள் லாபகரமாக இயங்கும் வகையில், பால் உற்பத்தி ஒழுங்குமுறை மற்றும் பால் கூட்டுறவுச் சட்டம் இயற்றப்படும்.
நுகர்வோருக்குத் தேவையான ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை வீட்டிலிருந்தபடியே வாங்க வசதியாக, இணையவழி விற்பனை ஏற்படுத்தப்படும். இதற்காக தனி செயலி, இணையதளம் உருவாக்கப்படும். முதல்கட்டமாக சென்னை மற்றும் இதர மாநகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
புதிதாக காஞ்சிபுரம், திருவாரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக 2 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் உருவாக்கப்படும். சென்னை மாதவரத்தில் பால்பண்ணைப் பூங்கா மற்றும்அருங்காட்சியகம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.