

திருநெல்வேலி: போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்தில் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர். 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 போலீஸார் நேற்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி பல்வீர்சிங் பொறுப்பு வகித்தபோது, போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கியதாக சர்ச்சை எழுந்தது. ஏஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார். மாநில மனித உரிமை ஆணையம் தனியாக விசாரணை நடத்துகிறது. இதற்கிடையே காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.
அதிரடி மாற்றங்கள்: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு தலைமைக் காவலர் போகபூமன், கல்லிடைக்குறிச்சி தலைமைக் காவலர் ராஜ்குமார் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி சென்னை தலைமையிடத்துக்கும், அம்பாசமுத்திரம் சரக உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் காவல் நிலையப் பணிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மேலும் 6 பேர் காவல்துறையில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர்கள் எஸ்.சந்திரமோகன் (அம்பாசமுத்திரம்), பி.ராஜகுமாரி (கல்லிடைக்குறிச்சி), எ.பெருமாள் (விக்கிரமசிங்கபுரம்), அம்பாசமுத்திரம் கோட்ட சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன், தலைமைக் காவலர் எம்.சந்தானகுமார், காவலர் வி.மணிகண்டன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தால் அம்பாசமுத்திரம் காவல்கோட்ட அதிகாரிகள் கூண்டோடு காலியாவது, அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.