

கொடைக்கானல்; கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பேரிஜம் ஏரியும் ஒன்று. இங்கு வனத்துறையின் அனுமதி பெற்ற பிறகே வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும். அங்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கி பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத்தாக்கு என இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம். இதனால் சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் ஏரிக்குச் செல்ல அதிக ஆர்வம் காட்டுவர்.
சுற்றுலா பயணிகளுக்கு தடையா?: இந்நிலையில், பேரிஜம் ஏரிப்பகுதியில் நேற்று பிற்பகலுக்கு பின் யானைகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இன்று (ஏப்.6) யானைகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்லவில்லையெனில் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பும் இதேபோன்று யானைகள் கூட்டம் பேரிஜம் பகுதியில் முகாமிட்டிருந்தது. அதனால் அப்போது 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வன துறையினர் தடை விதித்தனர்.
கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பல இடங்களில் விளை நிலங்களுக்குள் யானைகள் கூட்டமாக புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. விவசாயிகள் யானைகளை விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.