Published : 06 Apr 2023 06:46 AM
Last Updated : 06 Apr 2023 06:46 AM
சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னையில் புதிதாக கோட்டூர்புரம், கோயம்பேடு, புழல், நீலாங்கரை, தரமணி மற்றும்மீனம்பாக்கம் என 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றைகாவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார்.
அபிராமபுரம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை திறந்துவைத்த காவல் ஆணையர் சங்கர்ஜிவால், காவல் நிலைய பணிகளையும் தொடங்கி வைத்தார். பின்னர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர்கள், மற்றும் போலீஸாரை வாழ்த்தி பொதுமக்களின் புகார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரியநடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கினார்.
இதே போன்று கோயம்பேடு காவல் நிலைய வளாகத்தில் கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையமும், புழல் காவல்நிலைய வளாகத்தில், புழல் அனைத்து மகளிர் காவல் நிலையமும், திருவான்மியூர் காவல் நிலைய வளாகத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையமும், தரமணி காவல் நிலைய வளாகத்தில் தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையமும், விமானநிலையம் காவல் நிலைய வளாகத்தில் மீனம்பாக்கம் அனைத்து மகளிர்காவல் நிலையமும் என 6 புதியஅனைத்து மகளிர் காவல் நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன.
கோட்டூர்புரம் காவல் நிலையத்தை காவல் ஆணையர் திறந்துவைத்த நிலையில் மற்ற 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும் காவல் ஆணையர் சார்பில், காவல் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் திறந்துவைத்தனர். அபிராமபுரம் காவல் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை பெருநகர கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் திஷா மிட்டல், மயிலாப்பூர் துணை ஆணையர் ரஜத் சதுர்வேதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட 6அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் காவல் ஆய்வாளர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டனர். அதன்படி, புழலுக்கு மஞ்சுளா,நீலாங்கரைக்கு தர்மா, தரமணிக்குஜோதி லட்சுமி, மீனம்பாக்கத்துக்குவிஜயலட்சுமி, கோயம்பேட்டுக்கு மகேஷ்வரி, கோட்டூர்புரத்துக்கு அந்தோணி விஜித்ரா பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT