Published : 06 Apr 2023 06:00 AM
Last Updated : 06 Apr 2023 06:00 AM
சென்னை: சென்னை பெரியமேடு, மைலேடி மாநகராட்சி பூங்கா நீச்சல் குளத்தில் காலை, மாலைகளில் ஏராளமான சிறுவர்கள் வந்து நீச்சல் பயிற்சி பெறுகின்றனர். சிறுவர்களுக்கு செந்தில் குமார், சுமன் என்ற இரு பயிற்சியாளர்கள் நீச்சல் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இங்கு நீச்சல் பயிற்சி பெறுவதற்காக சென்னை கொசப்பேட்டை, ஹாஜி முகமது அப்பாஸ் தெருவைச் சேர்ந்த ராகேஷ் குப்தா (40) என்பவர் தனது மகன் தேஜா குப்தாவை (7) சேர்த்துள்ளார். இந்த சிறுவன் வேப்பேரியில் உள்ள பள்ளி ஒன்றில்2-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல ராகேஷ் குப்தா தனது மகனை நீச்சல் பயிற்சிக்காக அழைத்து வந்தார். தேஜா உட்பட15 சிறுவர்களுக்கு பயிற்சியாளர்கள் நீச்சல் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தனர். பயிற்சி முடிந்தபின்னர் அனைத்து சிறுவர்களும்வெளியேறிய பின்னர் தேஜா மட்டும் காணவில்லை. அதன்பிறகு நீச்சல் குளத்தில் தேடியபோதுநீருக்கடியில் அசைவற்ற நிலையில் கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக சிறுவன் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் தேஜா ஏற்கெனவேஇறந்துவிட்டதாக தெரிவித்தனர்.சிறுவன் இறந்தது குறித்து பெரியமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக கவனக்குறைவாக இருந்ததாக பயிற்சியாளர்கள் திருவல்லிக்கேணி செந்தில் குமார் (37),அதே பகுதி சுமன் (31) மற்றும்கண்காணிப்பாளர் பிரேம் குமார்(25) ஆகிய 3 பேரை கைதுசெய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நீச்சல் குளத்தை சாலிகிராமத்தைச் சேர்ந்த ராஜூ என்பவர் நடத்தி வரும் தனியார் நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு முன்னர்டெண்டர் எடுத்துள்ளது. தற்போது அந்த நீச்சல் குளத்தை ஓய்வு பெற்றபோலீஸ் அதிகாரி முனியாண்டி என்பவர் பராமரித்து வருகிறார்.
மகனின் சடலத்தை கண்டு அவரது தந்தை ராகேஷ்குப்தா கண்ணீருடன் கூறியதாவது: இங்கு 2 பயிற்சியாளர்கள் நீச்சல் குளத்தில் பயிற்சி அளிப்பார்கள். மேலும், இருவர் மேல் பகுதியில் நின்று கொண்டு கண்காணிப்பார்கள். பெற்றோர்கள் நாங்களும் பிள்ளைகளை கவனித்துக் கொண்டிருப்போம்.
சம்பவத்தன்று நான் எனது மகன் நீச்சல் பயிற்சி பெறுவதை கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்த ஊழியர்கள் இங்கு யாரும் நிற்க கூடாது என எங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். நான் உட்பட மீதம் உள்ள பெற்றோர் அனைவரும் அங்கிருந்து சற்று தொலைவுக்கு சென்றோம்.
சிறிது நேரத்துக்கு பிறகு நான் வந்த பார்த்தபோது தேஜாவை மட்டும் காணவில்லை. அதன் பிறகுதான் நீச்சல் குளத்தில் தேடப்பட்டு மகன் மீட்கப்பட்டார். மகன் மரணத்துக்கு நீச்சல் பயிற்சியாளர் மற்றும் அதன் நிர்வாகமே காரணம் என்றார்.
நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இச்சம்பவத்தை தொடர்ந்து மை லேடி பூங்கா நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ய அறிவுறுத்தி இருக்கிறோம்.ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அப்பூங்காவை பராமரிக்க ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கும்போது, பல்வேறு பாதுகாப்பு நிபந்தனைகள் விதித்துதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விசாரணையில் ஒப்பந்ததாரர் மீது தவறு இருக்கும் பட்சத்தில், அந்தஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT