குளத்தில் மூழ்கி உயிரிழந்த அர்ச்சகர் குடும்பத்தினருக்கு தலைவர்கள் இரங்கல்

குளத்தில் மூழ்கி உயிரிழந்த அர்ச்சகர் குடும்பத்தினருக்கு தலைவர்கள் இரங்கல்
Updated on
1 min read

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மூவரசன்பேட்டை கிராமத்தில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து அரசியல் தலைவர்கள் கூறியிருப்பதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அறநிலையத் துறையின் அலட்சியத்தாலும் மெத்தனத்தாலுமே இத்தகைய அசம்பாவிதங்கள் கோயில் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடைபெறுகின்றன. உயிரிழந்த 5 அர்ச்சகர்களுமே 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளவயதினர் என்பது மேலும் வருந்தத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க மிகுந்த கவனத்துடன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமாக நிவாரணத்தை உயர்த்தி வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணிவழங்க வேண்டும். வரும் காலங்களில் திருவிழாக்களின்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: பெரும்பாலும் கோயில் திருவிழாக்களில் நெறிமுறை கட்டுப்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் இத்தகைய விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. இதை முற்றிலும் தவிர்ப்பதற்கு தகுந்த ஆணைகளை இந்து சமய அறநிலையத் துறை பிறப்பிக்க வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: கோயில் குளத்தில் மூழ்கி 5 பேர் மூழ்கி உயிரிழந்தது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. வரும்காலங்களில் போதிய முன்னெச்சரிக்கை மூலம் உயிரிழப்புகள் தடுக்கப்பட வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: எதிர்பாராத நிகழ்வாக இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இனிமேலும் இது போன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சம்பந்தபட்ட அரசுத் துறைகளின் சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: செய்தி அறிந்து மிகுந்த கவலையுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.

வி.கே.சசிகலா: 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் உள்ள குளங்கள் முறையாக பராமரிக்கபடுகின்றனவா? என ஆய்வு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in