Published : 06 Apr 2023 06:43 AM
Last Updated : 06 Apr 2023 06:43 AM
சென்னை: பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி,காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். பொய்புகாரின் அடிப்படையில் தனது கணவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஹரி பத்மன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்படி, போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஹரி பத்மனை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, ஹரி பத்மனுக்கு எதிரான ஆதாரங்களை போலீஸார் திரட்டி வருகின்றனர். அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளையும் போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
இந்நிலையில், பேராசிரியர் ஹரி பத்மனின் மனைவி திவ்யா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மாலை ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நானும் கலாஷேத்ரா கல்லூரியில்தான் பணியாற்றுகிறேன். எனது கணவர் நேர்மையானர். எந்த தவறும் செய்யாதவர். காழ்ப்புணர்ச்சி கொண்ட 2 பேராசிரியர்களின் தூண்டுதலின்பேரில் என் கணவர் மீது முன்னாள் மாணவி ஒருவர் பொய் புகார் கொடுத்துள்ளார். அதில், உண்மை இல்லை.
புகார் கொடுத்த மாணவி எங்களது மகள் பிறந்தநாள் நிகழ்வில்கூட கலந்து கொண்டுள்ளார். எனவே, நேர்மையான பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை வைத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். எனது கணவர் மீதுள்ள குற்றச்சாட்டை அவர் சட்ட ரீதியில் சந்திப்பார். பொய் புகார் கொடுத்தவர்கள் மீதும், அதற்கு காரணமானவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் திவ்யா குறிப்பிட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த புகார் மனு மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT