Published : 06 Apr 2023 06:11 AM
Last Updated : 06 Apr 2023 06:11 AM

திருப்பத்தூர் | ஜாதிச்சான்றிதழ் வழங்க பாரபட்சம் காட்டும் வருவாய் துறையினர்: ஆட்சியரிடம் குறவன் இன மக்கள் மனு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்க வந்த குறவன் இன மக்கள். படம்: ந,சரவணன்.

திருப்பத்தூர்: எஸ்.சி., ஜாதிச்சான்றிதழ் வழங்க பாரபட்சம் காட்டும் வருவாய் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம், குறவன் இன மக்கள் நேற்று மனு அளித்தனர்.

தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குறவன் இன மக்களுக்கு எஸ்.சி., ஜாதிச் சான்றிதழ் கேட்டு கடந்த மாதம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலு வலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, கிராமம் தோறும் முகாம் நடத்தி தகுதியானவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங் கப்படும் என தெரிவித்தார்.

இதனையேற்ற குறவன் இன மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில், போராட்டத்தை கைவிட்டும் குறவன் ஜாதிச் சான்றிதழ் தரவில்லை எனக்கூறிய குறவன் இன மக்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்தனர்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்காமல் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், மனு அளிக்க வந்த குறவன் இன மக்கள் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக காத்திருந்தனர். இதையடுத்து, அவர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் காவலர்கள் உள்ளே அனுமதித்தனர். இதையடுத்து, ஜாதிச்சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் குறவன் இன மக்கள் நேற்று மனு அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப் பதாவது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம், குனிச்சி, லக்கிநாயக்கன்பட்டி, கோனேரி குப்பம், பாச்சல், அங்கநாதவலசை, பேராம்பட்டு, பொம்மிக்குப்பம், மிட்டூர், மிட்டூர் குறவன் கொட்டாய், பூங்குளம், சக்கரகுப்பம் அருகில் உள்ள புத்தூர் கிழக்குத் தெரு, ஏ.கே.மோட்டூர். ஆத்துமேடு, மேல் அச்சமங்கலம் மற்றும் களர் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிக மான மாணவர்கள் தங்களின் ஜாதிச் சான்றிதழ் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் காத்திருக்கின்றனர்.

இவர்களின் கனவை பாழாக் கும் விதமாக கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்படுகின்றனர். குறிப்பாக, கிராம நிர்வாக அலுவலர்களான மகேஷ் (வெங்களாபுரம்), பெருமாள் (குனிச்சி), ரமேஷ் (லக்கி நாயக்கன்பட்டி), சிவக்குமார் (சக்கரகுப்பம்), தினகரன் (பொம்மிக் குப்பம்), சதீஷ் (ஏ.கே மோட்டூர்), ராஜ்குமார் (அச்சமங்கலம்), அருணா (திரியாலம்), வருவாய் ஆய்வாளர்களான ராஜா (ஆண்டியப்பனூர்), பிரியா (கந்திலி), வனிதா (அம்மனாங்கோயில்), அன்னலட்சுமி (நாட்றாம்பள்ளி). மண்டல துணை வட்டாட்சியரான ராஜேஷ் (நாட்றாம்பள்ளி) ஆகியோர் ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றனர். அவர்கள் மீது விசாரணை நடத்தி உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அதில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் விசாரணை நடத்தி தகுதியானவர்களுக்கு சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x