Published : 04 Sep 2017 09:22 AM
Last Updated : 04 Sep 2017 09:22 AM

அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு தொடரும் போராட்டம்: சென்னையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 100 பேர் கைது - மயிலாப்பூரில் வி.சி. கட்சியினர் மறியல்

மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் 2-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, பிளஸ் 2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. சென்னையில் மட்டும் 23 இடங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல்கள் நடந்தன.

இந்நிலையில், நேற்று 2-வது நாளாகவும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. நேற்று காலை 10.50 மணிக்கு மே 17 இயக்கத்தினர், தமிழர் விடியல் கட்சி, டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100 பேர் தியாகராய நகர் செல்வா வணிக வளாகம் அருகே திரண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டவாறு பாஜக அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் தங்கவைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு லயோலா கல்லூரி மாணவர்கள், கல்லூரி அருகே உள்ள சுரங்கப்பாதையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த வழியில் போக்குவரத்து தடைபட்டது. நுங்கம்பாக்கம் போலீஸார் விரைந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். மயிலாப்பூர் லஸ் கார்னரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் மயிலாப்பூர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட வைத்தனர். போராட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

பாஜக அலுவலகத்தை முற்றுகையிட தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பைச் சேர்ந்த 10 பேர் ஒருங்கிணைப்பாளர் ஹரி தலைமையில் திரண்டனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரையில் போலீஸார் அதிக அளவில் நிறுத்தப்பட்டு இருந்தனர். மத்திய அரசு அலுவலகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x