

சென்னை: தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க, 50 ஆயிரம் மருத்துவர்கள் தங்களுடைய சுயவிவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட, பதிவு செய்த மருத்துவர்கள் உள்ளனர். கவுன்சிலுக்கான நிர்வாகிகள் தேர்தல் 5 ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும்.
மதுரையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கே.செந்தில் தலைமையிலான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களது பதவிக்காலம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதியுடன்நிறைவடைந்தது. அதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தும் பணிகள் தொடங்கிய நிலையில், தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுஉள்ளது.
உயர் நீதிமன்றத்தின் அறிவுரைப்படி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகப் பணியை மேற்கொள்ள, தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமார், தலைமையில் 6 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் சில தினங்களுக்கு முன்பு சென்னை அரும்பாக்கத்தில் உள்ளகவுன்சில் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, தேர்தல் நடத்தவசதியாக வாக்காளர் விவரங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அது தொடர்பான சுற்றறிக்கையை மருத்துவக் கவுன்சில் பதிவாளர் வெளியிட்டுள்ளார். அதில், கவுன்சில் நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்காக வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பது அவசியம். அதற்கு, பதிவு செய்த மருத்துவர்களின் தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும்.
குறிப்பாக, இ-மெயில், இருப்பிட முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைப் பதிவு செய்வது கட்டாயமாகும். இன்னும் 50,174 பேர் தங்களது சுயவிவரங்களைப் புதுப்பிக்கவில்லை. அடுத்த 2 வாரங்களுக்குள் அவற்றை மருத்துவக் கவுன்சிலின் இணையதளத்தில் புதுப்பிக்க வேண்டும்.
உயிரிழந்த மருத்துவர்களின் விவரங்களையும், அவர்களது இறப்புச் சான்றிதழ்களையும், சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுகள் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.