Published : 05 Apr 2023 06:06 AM
Last Updated : 05 Apr 2023 06:06 AM

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ஜூலைக்குள் பணிகளை முடிக்க இலக்கு

சென்னை: சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை ஜூலை மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்து சேவையை அதிகரிக்கும் நோக்கிலும் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தெற்கு ரயில்வேயுடன் இணைந்து, முதல் கட்டமாக சென்னை கடற்கரை - மயிலாப்பூர் இடையேயும், இரண்டாவது கட்டமாக மயிலாப்பூர் - வேளச்சேரி இடையேயும் பணிகள் முடிக்கப்பட்டு, இந்த வழித்தடத்தில் தினமும் 150 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதை த்தொடர்ந்து 3-வது கட்டமாக, வேளச்சேரி - பரங்கிமலை திட்டப்பணி ரூ.495 கோடியில் கடந்த 2008-ம் ஆண்டுதொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 5 கி.மீ. தொலைவில், 4.5 கி.மீ.க்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டன. இந்நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் பல ஆண்டுகளாக பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இப்பிரச்சினைக்கு 2 ஆண்டுக்கு முன்பு தீர்வு காணப்பட்டதால், கடந்த சில மாதங்களாக இந்த வழித்தடத்தில் பணிகள் மீண்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாலத்தை தாங்கும் தூண்கள் அமைத்து, அதன் மீது கர்டர்கள் (தாங்கு பாலம்) பொருத்தும் பணி நடைபெறுகிறது.

மாநகரின் முக்கிய ரயில் திட்டம் என்பதால், பயணிகள் மத்தியில் இத்திட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ரயில் பயணிகள் சிலர் கூறும்போது, "சென்னையில் அடுத்தகட்ட போக்குவரத்து வளர்ச்சியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து முக்கியமானதாக மாறி வருகிறது.

அந்த வகையில்,பரங்கிமலையில், மேம்பால மின்சார ரயில்பாதை இணைப்புஎன்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே, திட்டப்பணிகள் விரைவில் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் பாதை திட்டத்தில், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்க தயாராக உள்ளன.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் வரிசையாக பிரம்மாண்டமான தூண்கள் அமைத்து, மேம்பாலம் இணைப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

தற்போது, பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 500 மீட்டர் தொலைவில் 250 மீட்டர் வரை பணிகள் முடிந்துவிட்டன. மொத்தம் 36 கர்டர்களில் 18 கர்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகள் வரும் ஜூலைக்குள் முடிக்கஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பின்னர், ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெற்று, ரயில் சேவை தொடங்கப்படும் என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x