Published : 05 Apr 2023 07:20 AM
Last Updated : 05 Apr 2023 07:20 AM

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான நிலக்கரி நிறுவன அதிபர் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ. 564 கோடி அளவுக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைதான நிலக்கரி நிறுவன அதிபரின் ஜாமீன் மனுவை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவன இயக்குநர் அகமது ஏ.ஆர்.புகாரி. இவர் கடந்த 2011-12 மற்றும்2014-15 காலகட்டத்தில் தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து, அதை பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அகமது ஏ.ஆர்.புகாரி மற்றும் பொதுத்துறை நிறுவன அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. தரமற்றநிலக்கரியை இறக்குமதி செய்துவிற்பனை செய்ததன் மூலம் ரூ.564.84 கோடியை அகமதுஏ.ஆர்.புகாரி தனது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக கூறி அவருடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி புகாரியை அமலாக்கத்துறை கைது செய்தது. அதன்பின், ஜாமீன் கோரி 13-வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் புகாரி மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதானவிசாரணை, நீதிபதி மெகபூப் அலிகான் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், விசாரணை அமைப்பு உரிய காலகட்டத்துக்குள் விசாரணையை நிறைவு செய்யாமல், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது என வாதிடப்பட்டது.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ‘‘மனுதாரர், கடந்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்.23-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை சரிபார்த்தே இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று இந்த நீதிமன்றம் விசாரித்து வருகிறது’’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘உரிய காலகட்டத்துக்குள்தான் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை விசாரணை அமைப்பு தாக்கல் செய்துள்ளது. அடையாளம் தெரியாத பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் யார், அவர்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டனரா, இல்லையா என்பதை விசாரணை அமைப்பு கண்டறிந்து, கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை என்றாலும், அது, இந்த வழக்கின் விசாரணையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது’’ என கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x