Published : 07 Sep 2017 08:59 AM
Last Updated : 07 Sep 2017 08:59 AM

நீட் தேர்வுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: ஜெ. நினைவிடத்தில் மாணவர்கள் திடீர் தர்ணா - போலீஸ் தடையால் வெறிச்சோடிய மெரினா

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களை அகற்ற முயன்றபோது போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் என கோரி தமிழகம் முழுவதும் கடந்த 6 நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்புத் துணிகளை கண்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர். சென்னை நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் கத்திப்பாரா மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு நேற்று மதியம் பொதுமக்கள்போல வந்த இந்திய மாணவர் சங்கத்தினர் திடீரென சமாதி அருகே அமர்ந்து தர்ணா நடத்தினர். சிலர் தியானத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து மாணவர்களை போலீஸார் அங்கிருந்து வலுக்கட்டாய அப்புறப்படுத்தினர். அப்போது மாணவர்கள் சிலர் போலீஸாரிடம், ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் இங்கு தியானம் செய்யும்போது எங்களுக்கு மட்டும் ஏன் அனுமதி இல்லை’ என்று கேள்வி எழுப்பினர். இருப்பினும், மாணவர்களை வலுக்கட்டாயமாக போலீஸார் அப்புறப்படுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வெறிச்சோடிய மெரினா

பிராட்வேயில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அண்ணாநகர் கந்தசாமி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதால் பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி, மாநில கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் உதவி கமிஷனர்கள் தலைமை யில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தைப்போல மாணவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக போலீஸாருக்கு தகவல்கள் வந்தன. அதைத் தொடர்ந்து மெரினா உட்புறச்சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் உட்பட அனைவரும் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் நேற்று மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

கல்லூரிகளுக்கு விடுமுறை

நீட் தேர்வுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், அந்தந்த பகுதிகளில் நிலைமைக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களின் அறிவுறுத்தலின் பேரில் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்லூரிக் கல்வி இயக்குநர் பேராசிரியை ஜெ.மஞ்சுளா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, சங்கரன்கோவில், சேரன்மாதேவி, தூத்துக்குடி, கோவில்பட்டி, கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகாசி, காரைக்குடி, நாமக்கல், திருச்செங்கோடு, ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், அரசியல் கட்சியினர், வணிகர் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல இடங்களில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x