

மோடி படத்துடன் எந்தக் கட்சி பிரச்சாரம் செய்யலாம் என்பதை பாஜக தலைமை ஓரிரு நாளில் அறிவிக்கும், பாஜகவும் எங்களை ஆதரிப்பார்கள் என தேமுதிக அலுவலகத்தில் பாமக வேட்பாளர் அனந்தராமன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் உறுதியான முடிவு எட்டப்படாமல் குழப்பநிலை நீடிக்கிறது. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் அனந்தராமன் மோடி படத்துடன் பிரச்சாரம் செய்துவருகிறார். அதே நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனும் மோடி படத்துடனும், பாஜக நிர்வாகிகள் ஆதரவுடன் பிரச்சாரம் செய்துவருகிறார்.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் விஸ்வேஷ்வரன் கூறுகையில், "மோடி படம், பாஜக சின்னம் மற்றும் கொடியைப் பயன்படுத்த என்.ஆர்.காங்கிரஸுக்குத்தான் உரிமையுள்ளது. பாஜக கூட்டணியில் புதுவை தொகுதி வேட்பாளர் என்.ஆர்.காங்கிரஸ்தான். இது தொடர்பாக, கட்சித் தலைமையிடம் அதிகாரப்பூர்வ கடிதம் கேட்டுள்ளோம். பாமகவினர் பாஜக சின்னம், கொடி, மோடி படத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் புகார் தந்துள்ளோம். ஓரிரு நாளில் இப்பிரச்சினை தீர்ந்து விடும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தேமுதிக அலுவலகத்துக்கு பாமக வேட்பாளர் அனந்தராமன் தனது ஆதரவாளர்களுடன் நண்பகலில் சென்றார். அவரை தேமுதிக மாநிலப் பொறுப்பாளர் செல்வராஜ் வரவேற்றார். இதையடுத்து இரு கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
அதையடுத்து செய்தியாளர்களிடம் தேமுதிக பொறுப்பாளர் செல்வராஜ் கூறுகையில், "புதுச்சேரியில் பாமகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான முடிவை தேமுதிக தலைமை விரைவில் தெரிவிக்கும். கட்சி நிர்வாகிகள் இணைந்து செயல்படுவோம். வரும் சட்டப்பேரவைத்தேர்தலிலும் இணைந்து பணியாற்றி ஆட்சியைப் பிடிப்போம்" என்று குறிப்பிட்டார்.
பாமக வேட்பாளர் அனந்தராமன் கூறுகையில், "பாஜக தலைமையிடம் பேசியுள்ளோம். ஓரிரு நாளில் அதிகாரபூர்வ வேட்பாளரை அவர்கள் தெரிவிப்பார்கள். பாஜக கூட்டணிக்காக தமிழகத்தில் பாமக பாடுபடுகிறது. தற்போது புதுச்சேரியில் பாமகவை தேமுதிக, மதிமுக, ஐஜேகே ஆகிய அனைத்து கட்சிகளின் ஆதரவு உள்ளது. விரைவில் பாஜகவும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். பொறுத்திருந்து பாருங்கள்" என்று குறிப்பிட்டார். இதையடுத்து இரு தரப்பு நிர்வாகிகளும் கலந்துப் பேசி விட்டு புறப்பட்டனர்.