

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கனரக வாகனங்கள் வந்து, செல்லும் நேரத்தை மாற்றியமைத்து அமைச்சர் பெ.கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நீண்ட கால பிரச்சினையாக இருந்து வருகிறது. நகரில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் பல்வேறு இடையூறுகளை அனுபவித்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு மக்கள் அதிக நடமாட்டம் உள்ள நேரங்களில் கனரக வாகனங்கள் மாநகரப் பகுதிக்குள் வருவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகரப் பகுதிக்குள் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கனரக வாகனங்கள் வந்து, செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், நகர துணை காவல் கண்காணிப்பாளர் சத்தியராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.