

வேலூர்: வேலூரில் ஆவினில் இருந்து பால் விநியோகம் தாமதம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்களும், முகவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரியில் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இங்கிருந்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு தினசரி சுமார் 83 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் 500-க்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 8 ஆயிரம் லிட்டர் பால் அளவுக்கு தயிர், மோர் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், வேலூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து கடந்த நான்கு நாட்களாக முகவர்களுக்கு செல்லும் பால் தாமதமாக செல்வதாகவும், தயிர், மோர் உள்ளிட்டவை குறித்த நேரத்துக்கு தயாரித்து வழங்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு பாலுக்கு முன் கூட்டியே பணம் செலுத்திய முகவர்கள் பாதிப்பதுடன் நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, வேலூர் நகரை தவிர்த்து பிற இடங்களில் உள்ள முகவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக பால் முகவர்கள் கூறும்போது, ‘‘ஆவின் பால் விநியோகத்தில் தொடர்ந்து குளறுபடி ஏற்பட்டு வருகிறது. கடந்த நான்கு நாட்களாக பால் குறித்த நேரத்துக்கு வருவதில்லை. அடிக்கடி இதே நிலை தான் நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையும் தாமதமாக பால் வந்தது.
நேற்று காலை 4 மணிக்கு வரவேண்டிய பால் 7 மணியை கடந்தும் வரவில்லை. நேரம் கடந்த பிறகு பால் வந்தாலும் விற்பனை செய்ய முடியவில்லை. ஆகவே, ஆவினை காப்பாற்றவும் முகவர்களை காப்பாற்றவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.
இனி தாமதம் இருக்காது: இது தொடர்பாக ஆவின் அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ‘‘வேலூர் ஆவினில் தினசரி 1.15 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், சுமார் 18 ஆயிரம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பால் பாக்கெட்டுகள் அடுக்கும் பணி, சென்னைக்கு அனுப்பும் பணியில் தாமதம் ஏற்படுவதால் உள்ளூர் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். வரும் நாட்களில் இந்த தாமதம் இருக்காது’’ என தெரிவித்தனர்.