

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறித்து மக்கள் பீதியடையும் அளவுக்கு எதுவுமில்லை எனவும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் ஏ.குலோத்துங்கன் கூறியுள்ளார்.
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது கடந்த 1-ம் தேதி கண்டறியப்பட்டது. 2-ம் தேதி இரவு அவர் உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.
மாவட்டத்தில் கரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு, முகக்கவசம் அணிவது போன்ற நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு தொடர்பான அறிவுறுத்தல்கள், பெண் உயிரிழந்த நிகழ்வு உள்ளிட்டவற்றால் மக்களிடையே ஒரு பதட்டமான சூழலும், மிகைப்படுத்தப்பட்ட தகவல் பரவலும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.குலோத்துங்கன் இன்று (ஏப்.4) ஆட்சியர்கத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: நரம்பியல் சார்ந்த நோயால் பாதிக்கப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த பெண் ஒருவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த மார்ச் 8-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கரோனா தொற்று இல்லை. ஏப்.1-ம் தேதி தொற்று கண்டறியப்பட்டது. 2-ம் தேதி உயிரிழந்தார். இணை நோய் பாதிப்புகளால் அவர் உயிரிழந்துள்ளார். இவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை எதுவும் பெறவில்லை. மாவட்டத்தில் இதுவரை 33 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. வீட்டுத் தனிமையில், நல்ல நிலையில் உள்ளனர். மருத்துவக் குழுவினர் அவர்களுடன் தொடர்பில் உள்ளனர். நலவழித்துறையும், மாவட்ட நிர்வாகமும் பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், முதியோர், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோர் பாதுகாப்பாக இருக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்முறைகளை கட்டாயப்படுத்தும் அளவுக்கான சூழல் நிலவவில்லை.
மாவட்டத்தில் இதுவரை நோய்த் தொற்று தொடர்பான பதட்டமான சூழலோ, சமூகப் பரவலோ இல்லை. அரசு மருத்துவமனையில் தற்போதைக்கு கரோனா வார்டு அமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை. எனினும் எந்தவிதமான சூழலையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது" என்றார். கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து கேட்டதற்கு, இந்த வாரத்தில் தடுப்பூசி வந்துவிடும் என ஆட்சியர் தெரிவித்தார். நல்வழித்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவராஜ்குமார், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.