Published : 23 Sep 2017 08:58 AM
Last Updated : 23 Sep 2017 08:58 AM

மத்திய அரசுக்கு எல்ஐசி சார்பில் ரூ.2,497 கோடி டிவிடெண்ட்: வைர விழாவில் மண்டல மேலாளர் தகவல்

மத்திய அரசுக்கு எல்ஐசி நிறுவனம் கடந்த ஆண்டில் ரூ.2,497 கோடி ஈவுத் தொகையாக (டிவிடெண்ட்) வழங்கி யுள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) தொடங்கப்பட்டு 60 ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, அண்ணாநகரில் உள்ள எல்ஐசி கோட்டம்-2 சார்பில் நேற்று வைர விழா கொண்டாடப்பட்டது. எல்ஐசி கோட்டம் 2-ன் முதுநிலை கோட்ட மேலாளர் பி.டி.ரவீந்திரன் வரவேற்புரை ஆற்றினார். தென்மண்டல மேலா ளர் ஆர்.தாமோதரன் தலைமை வகித்து பேசிய தாவது:

1956-ல் எல்ஐசி ரூ.5 கோடி முதலீட்டுடன் தொடங்கப்பட்டது. தற்போது இதன் சொத்து மதிப்பு ரூ.25 லட்சம் கோடி. கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு ரூ.2,497 கோடி ஈவுத் தொகையாக (டிவிடெண்ட்) எல்ஐசி வழங்கியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகளிலும் எல்ஐசி முதலீடு செய்துள்ளது.

பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தபோது, எல்ஐசி அதில் அதிக முதலீடு செய்து சந்தை மேலும் வீழ்ச்சியடையாமல் தடுக்கும் பணியில் முக்கியப் பங்காற்றியது. மத்திய அரசுக்கு ரூ.8.56 லட்சம் கோடி, மாநில அரசுகளுக்கு ரூ.6.55 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளது. தமிழக அரசுக்கு ரூ.61 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது. 12-வது ஐந்தாண்டு திட்டத்துக்கு ரூ.14.32 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளது. இதுவரை 23 தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ள போதிலும், எல்ஐசி 76 சதவீதம் தனது சந்தை பங்களிப்பை கொண்டு முதலிடத்தில் உள்ளது என்றார்.

விழாவில், காவல்துறை துணை ஆணையர் எம்.சுதாகர், உதவி ஆணையர் சந்திரசேகர், பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா, எல்ஐசி கோட்டம் 2-ன் சந்தை மேலாளர் ஆர்.கோவிந்தராஜா பங்கேற்றனர். பாலிசிதாரர்கள், சிறந்து விளங்கிய முகவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x