

சென்னை: திமுக அரசு உயர்த்தியுள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தற்போது நடைமுறையில் இருந்து வரும் வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அமைக்கஅரசு பரிந்துரைத்துள்ளதாகவும், இக்குழுவின் அறிக்கை பெறப்படும் வரை வழிகாட்டி மதிப்பு 2017 ஜூன் 8 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்புக்கு ஈடாக உயர்த்தப்படும் எனவும், பதிவுக் கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக்குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் உயர்த்தி இருக்கவேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பதிவுக்கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்பட்டாலும், வழிகாட்டி மதிப்பு உயர்வு காரணமாக, ஏற்கெனவே கட்டிய தொகையைவிட கூடுதல் தொகையை பதிவுத் துறைக்கு செலுத்தும் நிலைக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, நிலத்தின் வழிகாட்டி மதிப்பை குறைக்க திமுகஅரசு முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.