அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் | இடைக்கால தடை பிறப்பிக்க மறுத்து ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் | இடைக்கால தடை பிறப்பிக்க மறுத்து ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

Published on

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழுத் தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மறுப்புத் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், வரும் 20, 21-ம் தேதிகளில் இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியது தொடர்பாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை, தனி நீதிபதி கே.குமரேஷ்பாபு நிராகரித்து மார்ச்28-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரதுஆதரவாளர்கள் பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகர் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.அதில்,தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்யும் வரை, அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி பதவிவகிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்குநேற்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன்,முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், பி.எஸ்.ராமன் ஆகியோர், ‘‘தற்போது அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே, ஓபிஎஸ்தரப்பை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானத்துக்கு இடைக்காலத்தடை பிறப்பிக்காவிட்டால், எங்களது தரப்பு உறுப்பினர்களுக்கு சிக்கல் ஏற்படும். எனவே, அதிமுக உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி இடைக்காலத் தடை உத்தரவுபிறப்பிக்க வேண்டும்’’ என்றனர்.

அப்போது நீதிபதிகள், ‘‘தற்போதைய சூழலில் இந்த மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால், அது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. அனைத்து கோரிக்கைகளையும் வரும் 20, 21-ம் தேதிகளில் முழுமையாக விசாரித்து, முடிவு எடுக்கப்படும்’’ என்று கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in