

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலகட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது தலைமையில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை அதிமுக எதிர்கொள்ள இருக்கிறது.
இந்த தேர்தல் அவரது ஆளுமை மற்றும் தலைமைப் பண்பை மதிப்பிடும் காரணியாக உள்ளது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அதற்கு கட்சியை தயார்படுத்தும் விதமாக வரும் 7-ம் தேதி மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கிடையே அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துகள், அதற்கு பழனிசாமி எதிர்வினையாற்றியது போன்றவற்றால் இரு கட்சிகளிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, கட்சி செயற்குழு கூட்டம், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் 7-ம் தேதி பகல் 12 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமைஅலுவலகத்தில் நடைபெறும் என பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற விஐடி பல்கலைக்கழக வேந்தர்ஜி.விசுவநாதன் பேசும்போது, ‘‘கட்சியில் எத்தனையோ முன்னோடிகள் இருந்தபோதும், அண்ணா, இளைஞர்களான என்னையும், எஸ்.டி.சோமசுந்தரத்தையும் வேட்பாளராக நிறுத்தினார். அண்ணா தலைமையிலான திமுக 1967-ல் ஆட்சியை பிடிக்க காரணம், அவர்அதிக அளவில் இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்தியதுதான். அதை பழனிசாமி நினைவில்கொள்ள வேண்டும்’’ என்று அறிவுரை கூறி இருந்தார்.
இந்நிலையில் வரும் 7-ம் தேதிநடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் இளைஞர்களை உறுப்பினராகச் சேர்ப்பது, ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறையாமல் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ண யிப்பது, மக்களவைத் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.