Published : 04 Apr 2023 06:47 AM
Last Updated : 04 Apr 2023 06:47 AM
நாகர்கோவில்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி இழப்பைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காங்கிரஸ் இளைஞரணி கிழக்கு மாவட்டத் தலைவர் டைசன் தலைமையில் காங்கிரஸார் நாகர்கோவில் பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்நேரத்தில் பாஜக அலுவலகத்தில் கட்சி ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
காங்கிரஸார் மறியலில் ஈடுபடுவதைப் பார்த்து, அலுவலகத்தில் இருந்த பாஜக நிர்வாகிகள் வெளியே வந்து, ‘கட்சி அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தாதீர்கள். வேறு இடத்துக்கு செல்லுங்கள்’ எனக் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அப்போது கட்சிக் கொடிக்கான கம்புகளால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். சாலையோரம் கிடந்த கற்கள், செங்கல்கள் போன்றவற்றையும் இரு தரப்பினரும் வீசி எறிந்துள்ளனர்.
ஏடிஎஸ்பி ஈஸ்வரன் தலைமையில் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த 4 பேர் காயம் அடைந்தனர். போராட்டத்தின்போது வீசி எறியப்பட்ட காங்கிரஸ் கொடிகளை பாஜகவினர் சாலையில் போட்டு எரித்தனர்.
தகவல் அறிந்த நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட பாஜகவினர் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் பேச்சு நடத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டது.
பதற்றமான சூழலால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து இரு கட்சியினரும் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT