

சென்னை: பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: கழிவு மேலாண்மையில் கேரளா முதலிடம் வகிப்பதாகவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம்அபராதம் விதிக்காத ஒரே மாநிலம்கேரளா என்றும் பெருமையாக மார்தட்டி கொண்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
ஆனால், கடந்த பல மாதங்களாக,கேரளாவிலிருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்டு, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் மின்னணு கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை நீர்நிலைகளில் கரைப்பது அல்லது எரிப்பது எனதமிழகத்தை தன் குப்பைத் தொட்டியாக கேரள அரசு கருதி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்காசி மாவட்டம் கரும்பனூரில் கேரள அரசால் கொட்டப்பட்ட மின்னணு கழிவுகள் எரிக்கப்பட்டு மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகடும் கண்டனத்திற்குரியது. மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள போக்குவரத்து மற்றும் காவல்துறை சோதனை சாவடிகளில் உள்ளஅதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதுதான் இந்த அவல நிலைக்கு காரணம்.
கரும்பனூரில் நடைபெற்ற இந்த நாசகார வேலையை தடுக்கமுடியாத அனைத்து அரசு அதிகாரிகளும் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இனி மின்னணு மற்றும் மருத்துவ கழிவுகள் கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்குள் வருவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.