ஏப். 8-ல் பிரதமர் மோடி சென்னை வருகை: சென்ட்ரல் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக ஆய்வு

ஏப். 8-ல் பிரதமர் மோடி சென்னை வருகை: சென்ட்ரல் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக ஆய்வு
Updated on
1 min read

சென்னை: சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்க பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி சென்னை வருவதையொட்டி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள், ஆர்பிஎஃப் அதிகாரிகள் மற்றும் தமிழக போலீஸார் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தை திறந்துவைக்க பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி சென்னைக்கு வருகிறார். மேலும், சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை, தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் 3 முறை விரைவு ரயில் சேவை ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதேபோல, ரூ.294 கோடி மதிப்பில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு முடிக்கப்பட்டுள்ள அகலப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள், ஆர்பிஎஃப் அதிகாரிகள் மற்றும் தமிழக போலீஸார் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து, வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கிவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உறுதிசெய்யப்படவில்லை.

எனினும், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இங்கு கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது, அருகில் உள்ள கட்டிடத்தில் போலீஸார் பாதுகாப்பு, 11-வது நடைமேடையில் நிகழ்ச்சி நடத்துவது ஆகியவை தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆய்வில், வடசென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி, ஆர்பிஎஃப் சென்னை கோட்ட முதுநிலை ஆணையர் செந்தில் குமரேசன், தமிழக பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி வருவது இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in