Published : 04 Apr 2023 06:18 AM
Last Updated : 04 Apr 2023 06:18 AM
மதுரை: மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் மத்திய மற்றும் கிழக்கு தொகுதிகளில் (2 அமைச்சர்களின் தொகுதிகள்) மட்டும் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற தொகுதிகளுக்குட்பட்ட வார்டுகளுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று திமுக கவுன்சிலர் குற்றம் சாட்டினர்.
மதுரை மாநகராட்சி பட்ஜெட் விளக்கக் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் சிலர் மேயரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். அவர்களை மூத்த கவுன்சிலர்கள் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் நடந்த விவாதம் பின் வருமாறு: எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா(அதிமுக): பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எங்களுக்கு அறை ஒதுக்குமாறு ஓராண்டாக கூறி வருகிறேன். ஆனால், அறை ஒதுக்கவில்லை. மாமன்றத்தில் முன்வரிசையில் எங்களுக்கு இருக்கை ஒதுக்கவில்லை என்றார். அவருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர்.
மேயர் இந்திராணி: சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மண்டலத் தலைவர் வாசுகி: கவுன்சிலர்களுக்கு வார்டு நிதி ஒதுக்கீடு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தியிருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வார்டுகளில் அறிவித்த திட்டப் பணிகளுக்கான நிதியை வழங்க அனுமதியளிக்க வேண்டும்.
திமுக கவுன்சிலர் நாகநாதன்: இந்த பெட்ஜெட் அனைத்து வார்டுகளுக்குமாக தயாரிக்கப்படவில்லை. மத்திய தொகுதி, கிழக்கு தொகுதிகளுக்குட்பட்ட வார்டுகளுக்கு (2 அமைச்சர்களின் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகள்) மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் உள்ள வார்டு மக்களை, மாநகராட்சி நிர்வாகம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?
சோலைராஜா (அதிமுக): மாநகராட்சிக்குட்பட்ட 13 கால்வாய்களை தூர்வார பலமுறை வலியுறுத்தினேன். இந்த பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கீடு விவரம் இல்லை. கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்களுக்கு வார்டு நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், மதுரை மாநகராட்சியில் வரி இரு மடங்கு உயர்த்தியும் ரூ.10 லட்சமே வழங்கப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கவுன்சிலர் ஜென்னியம்மாள்: ஏராளமான கட்டிடங்களுக்கு மாநகராட்சி வரி போடாமல் உள்ளது. மத்திய அரசு கட்டிடங்களுக்கு வரிவசூல் செய்வதில்லை. இந்த வரியை வசூல் செய்தால் மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை ஏற்படாது. இவ்வாறு விவாதம் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT