திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
திருவாரூர்/ மயிலாடுதுறை: திருவாரூர் மாவட்டத்தில் 50,000 ஏக்கர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 40 நாள் பயிர்களாக உள்ளன. அதேபோல, 20,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி, 6,000 ஏக்கரில் எள் சாகுபடி நடைபெற்றுள்ளது.
இந்தச் சூழலில் நேற்று வெப்பச்சலனம் காரணமாக திருத்துறைப்பூண்டி, கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், நன்னிலம் மற்றும் திருவாரூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை கோடை நெற்பயிர்கள், பருத்தி மற்றும் எள் செடிகளுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் கோடை வெயிலின் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்திலும் நேற்று மதியம் வரை நன்கு வெயில் அடித்த நிலையில், திடீரென பிற்பகல் 1 மணியளவில் தொடங்கி ஒரு மணிநேரத்துக்கு பரவலாக கனமழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்தது. மாலை வரை குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
