Published : 27 Sep 2017 09:01 AM
Last Updated : 27 Sep 2017 09:01 AM

சிகரெட் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 11 வயது சிறுவன் கொன்று புதைப்பு: பக்கத்து வீட்டு இளைஞர் கைது

தஞ்சாவூரில் விளையாடிய இடத்தில் சிகரெட் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 11 வயது சிறுவனை கொன்று புதைத்த பக்கத்து வீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை, இ.பி. காலனி, பாப்பா நகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். தனியார் மருந்து நிறுவன விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரிகிறார். இவரது மகன் கிஷோர்(11). தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

கிஷோர், கடந்த 23-ம் தேதி மாலை தனது நண்பர்களுடன் வீட்டின் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோயில் திடலில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், கிஷோர் மட்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது தந்தை தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த தமிழ்வேந்தன் மகன் அரவிந்த் என்ற விஸ்வநாதன்(25), கிஷோரை கொலை செய்து, அருகில் உள்ள மைதானத்தில் புதைத்தது தெரியவந்தது. அவர், காட்டிய இடத்தில், கிஷோரின் சடலத்தை போலீஸார் நேற்று தோண்டி எடுத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார், தஞ்சாவூர் நகர டிஎஸ்பி எஸ்.தமிழ்ச்செல்வன், வட்டாட்சியர் தங்க.பிரபாகரன் உள்ளிட்டோர் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

சம்பவத்தன்று மதுபோதையில், சிகரெட் பிடித்தபடி வந்த அரவிந்த், அங்கு ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை வேறு இடத்துக்கு செல்லும்படி சத்தம் போட்டுள்ளார். அப்போது கிஷோர், நீங்கள் வேறு இடத்துக்குச் சென்று சிகரெட் பிடியுங்கள் எனக் கூறினாராம்.

இதனால், ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்தைப் பிடித்து தூக்கியுள்ளார். இதில், கழுத்து இறுகி கிஷோர் உயிரிழந்தார். இதை அறியாத மற்ற சிறுவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

கொலையை யாரும் பார்க்காததால், கிஷோரின் உடலைத் புதர் வழியாகத் தூக்கிச் சென்ற அரவிந்த், தனது வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் சடலத்தைப் புதைத்துவிட்டு தப்பிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த அரவிந்த் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x