

காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் 369 பவுன் நகை மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பெரிய தெருவில் வசிப்பவர் தொழிலதிபர் பாபு (52). காங்கிரஸ் பிரமுகரான இவர் அரிசி ஆலை, திருமண மண்டபம் வைத்துள்ளார்.
இவரது மகள் பரணிபிரியாவுக்கு, சென்னை பூந்தமல்லியில் உள்ள திருமண மண்டபத்தில், திங்கள்கிழமை காலை திருமணம் நடந்தது. இதற்காக, குடும்பத்துடன் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை, பாபு புறப்பட்டு சென்றுள்ளார்.
திருமணம் முடிந்தபிறகு, பாபுவின் மனைவி ராணி மற்றும் உறவினர்கள், திங்கள்கிழமை பிற்பகலில் வீடு திரும்பியுள்ளனர். கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறிக் கிடந்தன. அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப் பட்டு திறந்து இருந்தன. அதில் இருந்த தங்க நகை, வெள்ளி பொருட்களை காணவில்லை.
இதுகுறித்து பாபு மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செய்யாறு காவல்நிலைய ஆய்வாளர் செந்தில் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ஹாலில் உள்ள ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து, பின்வாசல் கதவின் தாழ்ப்பாளை உடைத்து தப்பிச் சென்றது தெரியவந்தது. பாபு வந்ததும் திருட்டுபோன நகைகளின் விவரம் கணக்கிடப்பட்டது.
திருமணமான மகளுக்கு வாங்கிய 145 பவுன் நகை உள்பட 369 பவுன் நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையிடம் பாபு தெரிவித் துள்ளார்.
இதன் மொத்த மதிப்பு ரூ.75 லட்சமாகும். கொள்ளை நடைபெற்ற வீட்டில், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித் தனர். போலீஸ் மோப்ப நாய், வீட்டைச் சுற்றி வந்தது. காவல் துறை கண்காணிப்பாளர் முத்தரசி, நேரில் சென்று பார்வையிட்டு, கொள்ளையர்களை பிடிக்க செய்யாறு ஆய்வாளர் செந்தில் தலைமையில், தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.