தாமதமாகும் சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ ரயில் இணைப்பு: காரணம் என்ன?

தாமதமாகும் சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ ரயில் இணைப்பு: காரணம் என்ன?
Updated on
1 min read

சென்னை: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையில் நான்காவது வழித்தடம் அமைக்கப்பட்ட பிறகுதான் பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயிலுடன் இணைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை பறக்கும் ரயில் சேவை சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையில் செயல்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் தற்போது தினமும் 150 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேளச்சேரியையும் - பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயிலுடன் இணைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை 2018-ம் ஆண்டு சமர்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றது.

இந்நிலையில், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையில் நான்காவது வழித்தடம் அமைக்கப்பட்ட பிறகுதான் பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயிலுடன் இணைக்கப்படும் என்று ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயிலுடன் இணைப்பது தொடர்பாக பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றது. இதில், சென்னை எழும்பூர் - கடற்கரை இடையில் 4 வழித்தடம் அமைத்த பிறகு இணைப்புப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 4-வது பாதை அமைக்க ரூ.279 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. தற்போது வரை ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023 - 2024-ம் நிதியாண்டில் இந்த திட்டத்திற்கு ரூ.96.70 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 1.51 ஹெக்டேர் நிலம் எடுக்கப்பட்டு அந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று அவர்கள் கூறினர்.

இதைத் தவிர்த்து, பறக்கும் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள மந்தவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தபடவுள்ளது. இந்த ரயில் நிலையங்கள் 4 முதல் 8 தளங்கள் கொண்ட ரயில் நிலையங்களாக தற்போது உள்ளது. இவற்றில் 20,44,400 ச.மீ அளவில் இடங்கள் உள்ளது.

இந்த இடங்களில் வணிக வளாகங்கள், உணவங்கள், வாகன நிறுத்த வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேற்கொள்ள சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in