சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்: பழைய தூண்களை அகற்ற முடிவு

ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தூண்கள்
ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தூண்கள்
Updated on
1 min read

சென்னை: துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்திற்கு ஏற்கனவே அமைக்கப்பட்ட பழைய தூண்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன. கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாகக் கூறி, உயர் மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அடுத்து வந்த அதிமுக அரசு தடை விதித்தது.

இந்நிலையில், மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி 20.56 கிலோ மீட்டர் நீளத்திற்கு மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது. அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் 2024 டிசம்பர் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அடுத்த சில நாட்களில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்திற்கு ஏற்கெனவே அமைக்கப்பட்ட பழைய தூண்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி பழைய தூண்களை அகற்றிவிட்டு, புதிய தூண்கள் அமைத்து, புதிய பால கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in