“அரசு அலுவலகத்தில் ஊழியரின் மரணத்துக்கு பணிச் சுமையே காரணம்” - மதுரையில் ஆர்ப்பாட்டம்

மதுரையில் இன்று தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் சார்பில் மதிய உணவு இடைவேளையின்போது மதுரை மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.
மதுரையில் இன்று தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் சார்பில் மதிய உணவு இடைவேளையின்போது மதுரை மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.
Updated on
1 min read

மதுரை: மதுரையில் அரசு ஊழியரின் மரணத்திற்கு தமிழக அரசின் கருவூலத் துறை, வேளாண்மைத் துறையையே காரணம் என்று கூறி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை வேளாண்மைத் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலத்தில் பணியாற்றிய சண்முகவேல், தமிழக அரசின் கருவூலத் துறையின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பின் (IFHRMS) இணைய திட்டத்தின் தொழில்நுட்ப பிரச்சினையால் ஓய்வின்றி இரவு பகலாக வேலைபார்த்த பணிச்சுமையால் மார்ச் 31-ம் தேதி அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்தவாறு மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு காரணமாக வேளாண்மைத் துறை நிர்வாகத்தையும் தமிழக அரசின் கருவூலத் துறையையும் கண்டித்து இன்று மதிய உணவு இடைவேளையின்போது மதுரை மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசியவர்கள், ''கருவூலத் துறையின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பின் (IFHRMS) இணையதளத்தில் பட்டியல் பணி செய்ய நேர ஒதுக்கப்படுகிறது. ஆனால் ஒதுக்கீடு செய்த நேரத்திலும் இணையதளம் சர்வர் பிரச்சினை காரணமாக சரிவர இயங்காததால் இரவில் கண்விழித்து பணி செய்யும் கட்டாயத்தால், பணிச்சுமை காரணமாக அரசு ஊழியர் சண்முகவேல் உயிரிழந்தார். தமிழக அரசு, அவரது குடும்பத்திற்கு உரிய கூடுதல் நிவாரணத் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.

மேலும், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறையில், நிதியாண்டு இறுதியில் அதாவது நிதியாண்டு முடியும் ஓரிரு தினங்களுக்கு முன்பு திட்டங்களுக்காக லட்சக்கணக்கான தொகையை கூடுதலாக ஒதுக்கீடு செய்து உடனடியாக முடிக்க நிர்பந்தம் செய்வதால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. அமைச்சுப் பணியாளர்கள் மன உளச்சலுக்கு ஆளாகி பணியின் தன்மை மாறுகிறது. கடைசி நேரத்தில் ஒதுக்கீடு செய்யும் நிதி செலவினத்தில் தவறுகள் நடைபெறவும் வாய்ப்புள்ளது. நிதியிருப்பின் அதனை முன்பணமாக துறைத் தலைவரால் பணமாக்கி அடுத்த நிதியாண்டு முதல் வாரத்தில் செலவு செய்யலாம். எனவே நிதியாண்டு இறுதியில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டாம்'' என வலியுறுத்திப் பேசினர்.

இதில், தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்க மாவட்டத் தலைர் ஆ.பரமசிவன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாநிலப் பொருளாளர் ரா.தமிழ், தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத் தலைவர் கூ.முத்துவேல், தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் கல்பனா ஆகியோர் வலியுறுத்தி பேசினர். முடிவில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா நிறைவுரை ஆற்றினார். இதில், வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள், அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in