Published : 03 Apr 2023 06:29 AM
Last Updated : 03 Apr 2023 06:29 AM
சேலம்: ‘அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக தனது சொந்த மாவட்டமான சேலத்துக்கு பழனிசாமி நேற்று வந்தார். அவருக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையிலும், தலைவாசல் பகுதியில் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையிலும் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, பழனிசாமி பேசியது:
அதிமுக சரிந்துவிட்டது என்று கூறியவர்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு மீட்சி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வரும் அளவுக்கு காட்சியளிக்கிறது. அதிமுகவை எந்த கட்சியும் வெல்ல முடியாது.
அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சியை அழிக்க, ஒழிக்க வேண்டும் என்று ஆளும் கட்சி செயல்பட்டு வருகிறது. ஆனால் அது பலிக்காது, கானல் நீராகத் தான் மாறும்.
தற்போது நிர்வாகத் திறனற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக ஆட்சியில் திறந்து வைத்து வருகிறார்கள். நாங்கள் பெற்ற குழந்தைக்கு முதல்வர் ஸ்டாலின் பெயர் வைத்து வருகிறார்.
திமுக ஆட்சி எப்போது போகுமென மக்கள் பேசுகிறார்கள். தினமும் வழிப்பறி, கொள்ளை, பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் நிறைந்து காட்சியளிக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை. இதை எத்தனை முறை எடுத்துரைத்தும் திமுக அரசு அதை கண்டு கொள்ளவில்லை. இதற்கு முடிவு கட்ட, வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக-வுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
குடும்பத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி திமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் வாரிசுகள் கிடையாது. இங்கிருக்கும் நாம்தான் வாரிசுகள். திமுகவில் மிட்டா மிராசுதாரர்கள் தான் பதவிக்கு வர முடியும். அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதல்வர் என அனைத்து பதவிகளுக்கும் வரலாம். இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோன்று, சேலம் செல்லும் வழியில் விழுப்புரத்தில் கட்சியினர் மத்தியில் பேசிய பழனிசாமி, வருகிற மக்களவைத் தேர்தலோடு சட்டபேரவைத் தேர்தல் வந்தாலும் வரலாம். அதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்றார்.
முன்னதாக, அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில். கிளைக் கழக செயலாளராக இருந்து பொதுச் செயலாளர் என்ற உச்ச பொறுப்பில் கட்சி என்னை அமர்த்தி இருப்பது, எனக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் மட்டுமில்லை, இக்கட்சி மக்களாட்சி தத்துவத்துக்கு கொடுத்திருக்கும் அங்கீகாரம். சிறந்த முறையில் கட்சியை வழிநடத்தி, மீண்டும் அதிமுக ஆட்சி வருவதுற்கு பணியாற்றுவேன் என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT