Published : 01 Sep 2017 08:58 AM
Last Updated : 01 Sep 2017 08:58 AM

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தன்னாட்சி அந்தஸ்தை காப்பாற்றுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை கைவிட்டு தன்னாட்சி அந்தஸ்தை காப்பாற்றுங்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜூலை 12-ம் தேதி நான் எழுதிய கடிதம் மீதான தங்களது உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து இந்திய மொழிகளையும் வளர்ப்பதற்கான மத்திய அரசின் கொள்கையை நீங்கள் விளக்கியதை அறிந்து மகிழ்கிறேன். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் தமிழக அரசு 17 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. மத்திய அரசு கட்டிடப் பணிக்காக ரூ.24 கோடியை ஒதுக்கியதுடன், மத்திய பொதுப்பணித் துறை கட்டுமானப் பணியையும் தொடங்கிவிட்டது என்பதை மீண்டும் தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

இந்தச் சூழலில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அல்லது வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் முயற்சியை கைவிட்டு, அந்த நிறுவனத்தின் தன்னாட்சி அந்தஸ்தை பாதுகாக்க வேண்டும் என்று தங்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த நடவடிக்கை அந்நிறுவனத்தை மேலும் பலப்படுத்த உதவும். இதன்மூலம், அந்த நிறுவனம் செம்மொழி தமிழ்க் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக உருவாகும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x