Published : 03 Apr 2023 06:08 AM
Last Updated : 03 Apr 2023 06:08 AM
கோவை: விபத்து நடந்தபோது தலைக்கவசம் அணியாததால் காயம் ஏற்பட்டு, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கான இழப்பீட்டுத் தொகையில் 15 சதவீதத்தை பிடித்தம் செய்து கோவை மோட்டார் வாகன விபத்து வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை சூலூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர், கடந்த 2017 ஜனவரி 17-ம் தேதி, தான் வேலைபார்க்கும் கறிக்கடை உரிமையாளருடன் இருசக்கர வாகனத்தில் கிணத்துக்கடவு-வீரப்பகவுண்டனூர் சாலையில் சென்றார். அப்போது, மதுரையைச் சேர்ந்த சதீஷ் ஓட்டிவந்த ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிவராஜ் படுகாயமடைந்தார்.
பின்னர், விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் சிவராஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுரேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
பின்னிருக்கை பயணியாக மனுதாரர் பயணித்துள்ளார். விபத்தால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது அவர் தலைக்கவசம் அணிந்து சென்றிருந்தால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்பில்லை. தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்த மனுதாரரின் தற்கவனமின்மைக்காக 15 சதவீத இழப்பீட்டை கழிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
எனவே, ஆட்டோ ஓட்டுநரின் கவனமின்மை 85 சதவீதம் என நிர்ணயம் செய்கிறேன். வழக்கு நிலுவையில் இருந்தபோதே சிவராஜ் உயிரிழந்துவிட்டார். அவரது வாரிசுகளாக மனைவி, மகன், மகள் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். “விபத்து நடந்து 3 ஆண்டுகள் கழித்து 2020 ஜூன் 30-ம் தேதி சிவராஜ் உயிரிழந்துள்ளார்.
எனவே, விபத்து காயங்களால் அவர் உயிரிழந்ததாக கருத முடியாது. காயம் காரணமாக அவர் இறந்தார் என்பதற்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. எனவே, இழப்பீடு கிடைக்கத்தக்கதல்ல” என காப்பீட்டு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
விபத்தால் சிவராஜூக்கு மண்டை எலும்பில் முறிவு, மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு வாய் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனவே, இறந்தபிறகு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்பதாலேயே அவர், விபத்து காயத்தால் இறக்கவில்லை என்று கருத இயலாது. மருத்துவ ஆவணங்கள் மூலம் ஒருவரின் இறப்பை ஊர்ஜிதம் செய்ய முடியும்.
எனவே, சிவராஜை சார்ந்திருப்போருக்கான இழப்பீடு, ஈமகிரியை செலவு, மருத்துவ செலவு ஆகியவற்றுக்கு இழப்பீடாக மொத்தம் ரூ.14.41 லட்சம் கிடைக்கத்தக்கது. எனினும், சிவராஜின் தற்கவனமின்மைக்காக 15 சதவீதத்தை கழித்தது போக மீதம் ரூ.12.25 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் ஆட்டோ ஓட்டுநர், உரிமையாளர், காப்பீட்டு நிறுவனம் இணைந்து அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT