

சேலம்: சுங்கக்கட்டணம் உயர்வை கண்டித்து, வைகுந்தம் சுங்கச்சாவடி முன்பு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் 29 சுங்கச் சாவடிகளில் கடந்த 31-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
சுங்கக் கட்டணம் உயர்வைக் கண்டித்து வாகன உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கச்சாவடி முன்பு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி தலைமையில், சுங்கக்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
எடப்பாடி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணி, திருச்செங்கோடு லாரி உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் மூர்த்தி, திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி கூறும்போது, சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். ஏற்கெனவே டீசல் விலை உயர்வால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுங்கக்கட்டணம் உயர்வால் மேலும் பாதிப்பு ஏற்படும். சேலத்தில் இருந்து குஜராத் மற்றும் டெல்லிக்கு லாரி மூலம் சரக்கு ஏற்றி செல்லும்போது ஏற்கெனவே செலுத்திய கட்டணத்தை விட தற்போது கூடுதலாக ரூ.4,500 வரை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மத்திய அரசு சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும், என்றார்.