

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் சாலைகள் தரமாக அமைக்கப்படுகின்றனவா என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ்ரூ.55.61 கோடியில் 78.29 கிமீ நீளத்தில் 452 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.29.71 கோடியில் 51.32 கிமீ நீளத்தில் 300 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.39.39 கோடியில் 75.16 கிமீ நீளத்தில் 405 சாலைகள் என மொத்தம் ரூ.124.71 கோடியில் 204.82 கிமீ நீளத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளைக் கண்காணிக்க ஆணையர் தலைமையில் அலுவலர்கள், பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இரவு 11 மணிக்கு.. இந்நிலையில் அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு சனிக்கிழமை இரவு 11 மணிக்கு கொடுங்கையூர் முத்தமிழ் நகர், தெற்கு அவென்யூ சாலையில் ரூ.13.95 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார் சாலைப் பணிகள், திரு.வி.க. நகர் மண்டலம், 70-வது வார்டு இளங்கோ தெருவில், ரூ.6.98 லட்சத்தில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலைப் பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அலுவலர்களுக்கு அறிவுரை: ஏற்கெனவே போடப்பட்ட சாலையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட அளவு, அதன் ஆழத்தை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர், புதிதாகப் போடப்படும் சாலை, அதில் பயன்படுத்தப்படும் தார்க்கலவையின் தரம், சாலையின் நடுவிலிருந்து ஓரத்துக்கான சாய்வுஅளவு ஆகியவற்றை ஆய்வு செய்து, சாலைகளை உரிய அளவுகளின் படியும், சரியான தரத்திலும் அமைப்பதை உறுதி செய்யுமாறும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி சாலைப் பணிகளை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ் தாஸ் மீனா,மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, வட்டார துணை ஆணையர்கள் எம்.சிவகுரு பிரபாகரன், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.