

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் சொத்து மற்றும் தொழில் வரியாக ரூ.440 கோடியே 38 லட்சம் வசூலித்து தேனாம்பேட்டை மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை மாநகராட்சி வருவாய் இனங்களில் அதிக வருவாய் தரக்கூடியதாக சொத்து வரியும், தொழில் வரியும் உள்ளன. கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த 2022-23 நிதியாண்டில் சொத்து வரியாக ரூ.1522 கோடியே86 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொழில் வரியாக ரூ.521 கோடிவசூலிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வரலாற்றில் இதுவே அதிகபட்சத் தொகையாகும். அதற்கு முந்தைய 2021-22 நிதியாண்டில் சொத்து வரியாக ரூ.778 கோடியும், தொழில் வரியாக ரூ.426 கோடியும் வசூலிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு கடந்த 2018-19 நிதியாண்டில் சொத்து வரியாக வசூலிக்கப்பட்ட ரூ.979 கோடியே அதிகபட்சவசூலாக இருந்தது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், கடந்த2022-23-ம் நிதியாண்டில் சொத்துவரி, தொழில் வரி ஆகியவை தேனாம்பேட்டை மண்டலத்தில்தான் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளன. இங்கு சொத்து வரியாக ரூ.305 கோடியும், தொழில் வரியாக ரூ.106 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 31-ம் தேதி மட்டும் சொத்து வரிரூ.10 கோடியே 95 லட்சம், தொழில்வரியாக ரூ.18 கோடியே 22 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.