

செம்மஞ்சேரி: தமிழக அரசு சார்பில் சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்காக சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் 105 ஏக்கர் கொண்ட காலி இடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ எனும் மெகா விளையாட்டு நகரத்தை நிர்மாணிக்கும் திட்டத்தைத் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. சர்வதேச தரத்தில் அமையவுள்ள இந்த விளையாட்டு நகரத்தின் ஆயத்த பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தொடங்கியுள்ளது.
இந்த விளையாட்டு நகரத்தில் ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும் சர்வதேச அளவில் போட்டிகள் நடைபெறும்போது வெளிநாட்டு வீரர்கள் வந்து செல்ல வசதியாக சென்னை விமான நிலையத்துக்கு அருகே இந்த விளையாட்டு நகரத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருந்தது.
இங்கு நீச்சல் வளாகம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்கள், ஹாக்கி ஸ்டேடியம் என 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமையவுள்ளன.
மேலும் இந்த வளாகத்தில் வீரர்கள் தங்கி பயிற்சி எடுக்கும் வகையில் பயிற்சிக் கூடங்கள், தங்கும் அறைகள், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், உணவகங்கள், ஓடுதளங்கள் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய டெண்டர் மூலம் நிபுணர் குழுவை நியமிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பின்புறம் விளையாட்டு நகரத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சர் நேற்று ஆய்வு செய்தார். விளையாட்டு திடல் அமைக்க உள்ள காலி இடங்களின் வழித்தடம் மற்றும் மாதிரி வரைப்படம் ஆகியவற்றை காண்பித்து அதிகாரிகள் அமைச்சருக்கு விளக்கமளித்தனர். அப்போது அதிலுள்ள சிக்கல்கள், ஆக்கிரமிப்பு பிரச்சினைகள், வழித்தடங்கள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: விளையாட்டு நகரம் தொடங்குவது குறித்து முதல்வர் அறிவித்துள்ளார். அதற்காக 2 இடங்களை ஆய்வு செய்ய உள்ளேன். அதில் ஒரு இடம்தான் செம்மஞ்சேரி. இதுபற்றி முதல்வரிடம் தெரிவித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கிட்டத்தக்க 105 ஏக்கர் கொண்ட இந்த இடம் சிறப்பாக இருக்குமா என்பது குறித்தும் மற்ற வசதிகள், சாலை வசதி உள்ளிட்ட அம்சங்களும் ஆராயப்படவுள்ளன. இதில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விளையாட்டு நகரம் சர்வதேச தரத்தில் அமையும். இதுகுறித்து விளையாட்டுத் துறை மானிய கோரிக்கையின்போது விரிவாக தெரிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த ஆய்வின்போது இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.