Published : 03 Apr 2023 06:55 AM
Last Updated : 03 Apr 2023 06:55 AM
சென்னை: குருத்து ஞாயிறு தினத்தையொட்டி ஆலயங்களில் நேற்று நடைபெற்ற குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கைகளில் ஏந்தியபடி பங்கேற்றனர்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைவதற்கு முன்பாக ஜெருசலேம் நகரின் வீதிகள் வழியாக கோவேறு கழுதை மீது அமர்த்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அப்போது வழிநெடுகிலும் மக்கள் ஒலிவ மர இலைகளை கையில் பிடித்து ‘ஓசானா ஓசானா'பாடலை பாடியதாகவும் கிறிஸ்தவர்களின் புனிதநூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது.
அந்நிகழ்வை நினைவுகூரும்வகையில் புனித வாரத்தின் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை குருத்து ஞாயிறாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. குருத்தோலை ஞாயிறு அன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கைகளில் ஏந்திப்பிடித்தவாறு "ஓசானா தாவீதின் புதல்வா" என்ற பாடலைப் பாடியபடி பவனியாக செல்வது வழக்கம்.
வரும் ஞாயிறு அன்றி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், புனித வாரத்தின் தொடக்க நாளான நேற்று குருத்து ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஆலயங்களில் குருத்தோலை பவனியும், அதைத்தொடர்ந்து, சிறப்பு ஆராதனையும் நடைபெற்றன.
சென்னை சாந்தோம் பேராலயத்தில் காலை 7 மணியளவில் குருத்தோலை பவனியும், அதைத்தொடர்ந்து பேராலய அதிபர் தந்தை எம்.அருள்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலியும் ஆராதனையும் நடைபெற்றன.
இதேபோல், மயிலாப்பூர் லஸ் சர்ச், ராயப்பேட்டை காணிக்கை மாதா ஆலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம்,எழும்பூர் திருஇருதய ஆண்டவர் ஆலயம், புதுப்பேட்டை அந்தோணியார் ஆலயம், பாரிமுனை தூய மரியன்னை பேராலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிஎஸ்ஐ திருமண்டல தலைமை ஆலயமான கதீட்ரல் பேராலயம், மிகவும் பழமைவாய்ந்த வேப்பேரி புனித அந்திரேயா ஆலயம், மயிலாப்பூர் நல்மேய்ப்பர் ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்களிலும் குருத்தோலை பவனியும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றன.
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் குருத்து ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT