Published : 03 Apr 2023 06:11 AM
Last Updated : 03 Apr 2023 06:11 AM

சுங்கக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள 566சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏப்.1-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரைகட்டண உயர்வு வசூலிக்கப்படுகிறது.

விலைவாசி உயரும்: இதனால் சரக்கு போக்குவரத்தில் கூடுதல் செலவினம் ஏற்படும், வாடகைக்கு செல்லும் வாகனகட்டணம் உயரும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். ஏற்கெனவே லாரி தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் தொழிலை நடத்துவதற்கு போதிய பொருளாதார வசதி இல்லாமல் சிரமப்பட்டு வரும் வேளையில் இப்போது சுங்கக்கட்டண உயர்வானது அவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் நடைமுறையில் உள்ள சுங்கக்கட்டண முறையை மாற்றி ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் வகையில் கொண்டு வர கோரிக்கை வைக்கின்றனர்.

எனவே, சுங்கக்கட்டண உயர்வானது பொருளாதார நிலை, விலைவாசி, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பலவற்றில் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை முக்கிய கவனத்தில் கொண்டு உயர்த்தப்பட்டுள்ள சுங்கக் கட்டணத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x