

சென்னை: வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக அடையாறு முகத்துவாரத்தில் ரூ.21கோடியில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டதற்கு அடையாற்றில் வந்த வெள்ளம் முக்கிய காரணமாக அமைந்தது. பெருவெள்ள பாதிப்புக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அடையாறு முகத்துவாரம் தூர்ந்துபோய், வெள்ள நீர் கொள்திறன்குறைந்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் அடையாறு முகத்துவாரத்தை தூர்வாரி அகலப்படுத்த முடிவு செய்து, கடந்த2019-ம் ஆண்டு ரூ.21 கோடி மதிப்பில் கருத்துரு தயாரிக்கப்பட்டது. திட்டத்துக்கு அரசு ஒப்புதல் பெறப்பட்டு, கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம்தான் அனுமதி கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது தூர்வாரும் பணிகளை நீர்வள ஆதாரத் துறை தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் படி, அடையாறு முகத்துவாரத்தில் உடைந்த பாலம் முதல் திருவிக பாலம் வரை 1.9 கிமீ நீளத்துக்கு தூர்வாரப்பட உள்ளது. இப்பகுதி மொத்தம் 231 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் தீவுத் திட்டுக்கள், அலையாத்தி தாவரங்கள் இருக்கும் இடங்கள் போக, 176 ஏக்கர் பரப்பில் மட்டும் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் 4 லட்சத்து 86 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு தூர்வாரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் மண் மாநகராட்சி குப்பை கொட்டும் வளாகம், கரையை பலப்படுத்துதல், மாநகராட்சி திறந்தவெளி நிலங்கள் ஆகியவற்றில் கொட்டப்பட உள்ளது.
இப்பணிகள் நிறைவடையும் நிலையில், வரும் காலங்களில் அதிக வெள்ளம் ஏற்பட்டாலும், சென்னை மாநகரில் வெள்ள பாதிப்பு வெகுவாக குறையும். கடல் அலை ஆற்றுக்குள் எளிதில் சென்று வரும் என்பதால், கொசுத் தொல்லையும் வெகுவாக குறையும் என நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.