Published : 03 Apr 2023 06:35 AM
Last Updated : 03 Apr 2023 06:35 AM

ஆரணியில் நகர காங்கிரஸ் தலைவர் யார்? - முடிவெடுக்க முடியாமல் காவல் துறையினர் திணறல்

திருவண்ணாமலை: ஆரணியில் காங்கிரஸ் கட்சியின் ‘நகரத் தலைவர் யார்?’ என்ற பஞ்சாயத்து காவல் நிலையம் வரை சென்றதால் சலசலப்பு ஏற் பட்டுள்ளது.

தமிழகத்தில் ‘கோஷ்டி’களின் சங்கமம் என பேசும் நிலையில் காங்கிரஸ் உள்ளது. தேசிய அளவிலும் கோஷ்டிகள் பிரபலம். அனைத்து நிலைகளிலும் பல கோஷ்களாக செயல்படுவது யதார்த்தமானது. இதுவரை கட்சி சார்பில் மூத்த உறுப்பினர் மத்தியஸ்தம் செய்து வந்த நிலையில், காவல் துறையினர் மத்தியஸ்தம் செய்யும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று அரங்கேறியது.

ஆரணி காங்கிரஸ் கட்சியில் நகரத் தலைவர் பதவிக்கு ‘யுத்தம்’ தொடர்கிறது. நான்தான் நகரத் தலைவர் என ஜெயவேல் மற்றும் பொன்னையன் ஆகியோர் மல்லுகட்டுகின்றனர். நகரத் தலைவராக கடந்தாண்டு நவம்பர் முதல் பொன்னையன் செயல்படுவதாக கூறப்படுகிறது. இவர், மாவட்டத் தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர். கட்சி நிகழ்ச்சிகளை நடத்தும் போது, இரண்டு கோஷ்டியினரும் தங்களது பரஸ்பர பலத்தை காண்பிப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், தமிழக காங் கிரஸ் தலைமை கடந்தாண்டு நவம்பர் மாதம் நியமித்த பதவிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், ஆரணி நகரத் தலைவராக ஜெயவேல் தொடர்ந்து செயல் படுவார் என ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் கூறியதாக தகவல் வெளியானது.

இதன் எதிரொலியாக, ‘நகரத் தலைவர் யார்?’ என்ற பஞ்சாயத்து ஆரணி நகர காவல்நிலையம் வரை நேற்று சென்றுவிட்டது. டிஎஸ்பி ரவிச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

நான் தான் நகரத் தலைவர் என ஜெயவேல் கூற, மாவட்டத் தலைவர் பரிந்துரையின்பேரில் நகரத் தலைவராக என்னை மாநிலத் தலைவர் அழகிரி நியமித் துள்ளதாக கூறி பொன்னையன் ஆவணத்தை காண்பித்தார். இரண்டு கோஷ்டிகளின் மோதலுக்கு ‘தீர்ப்பு’ சொல்ல முடியாமல் காவல் துறையினர் திணறினர்.

பஞ்சாயத்து நீடித்துக் கொண்டே இருந்ததால், கட்சி தலைமையிடம் பேசி சுமூக தீர்வு காணுமாறு அறிவுரை வழங்கி, இரண்டு கோஷ்டிகளையும் காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். அதுவரை கட்சி பதவியை குறிப்பிட வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.

இது குறித்து மாவட்டத் தலைவர் (வடக்கு) அண்ணாமலையை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஆரணி நகரத் தலைவராக பொன்னையனை கடந்தாண்டு நவம்பர் மாதம் மாநிலத் தலைவர் அழகிரி நியமித்துள்ளார். இந்த நிமிடம் வரை, அவர் தான் நகரத் தலைவர். காவல் நிலையம் வரை பிரச்சினை சென்றுள்ளது. இது குறித்து மாநிலத் தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முடிவெடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x