Last Updated : 02 Apr, 2023 08:17 PM

 

Published : 02 Apr 2023 08:17 PM
Last Updated : 02 Apr 2023 08:17 PM

''அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் திமுக: நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.....!'' -  சேலத்தில் இபிஎஸ் பேச்சு

சேலம்: ''அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்,'' என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

சேலம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் மத்தியில் பழனிசாமி பேசியது: ''அதிமுக ஆலமரம் போல் பரந்து, விரிந்து, வளர்ந்து தமிழகத்தில் வலிமையான இயக்கமாக இயங்க வித்திட்டவர் எம்ஜிஆர். அவர் விட்டு சென்ற பணிகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி, சோதனைகள் பல கடந்து, எம்ஜிஆர் கண்ட கனவை நிறைவேற்றிக் காட்டினார். 31 ஆண்டு காலம் அசைக்க முடியாத கட்சியாகவும், ஆட்சி செய்த கட்சியாகவும் அதிமுக உள்ளது. ஏழை மக்கள் ஏற்றம் பெற அடித்தளமிட்டது அதிமுக தான்.

ஏழைக் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி, கல்வி கற்பதிலே முதன்மை மாநிலம் தமிழகம் என்பதை ஜெயலலிதா உருவாக்கி காட்டினார். தீய சக்தி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விஞ்ஞான கல்வி மக்களுக்கு கிடைக்கக்கூடாது என்பதற்காக மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது. அதிமுக-வை அழிக்க திமுக தலைவர் ஸ்டாலின் துடித்துக் கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியில் இருக்கும் போது அதிகாரத்தை அனுபவித்தவர்கள், திமுக-வின் பி டீமாக செயல்பட்டு, அதிமுக-வை அழிக்கவும், ஒழிக்கவும் பார்க்கிறார்கள். அவர்களால் அது முடியாது.

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் இயக்கத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பேற்று உள்ளேன். சேலம் மாவட்டம் ஒரு ராசியான மாவட்டமாக பார்க்கப்படுகிறது. அதிமுக சரிந்துவிட்டது என்று கூறியவர்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு மீட்சி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வரும் அளவுக்கு காட்சியளிக்கிறது. அதிமுக கட்சியை தமிழகத்தில் எந்த கட்சியும் வெல்ல முடியாது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் சேவை செய்கின்ற கட்சி அதிமுக. தற்போது அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எதிர்க்கட்சியை அழிக்க, ஒழிக்க வேண்டும் என்று ஆளும் கட்சி செயல்பட்டு வருகிறது. அவர்களின் எண்ணம் பலிக்காது. கானல் நீராகத் தான் மாறும். அதிமுகவை ஒழிக்க ஒரு ஸ்டாலின் அல்ல, ஓராயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் தொட்டுப் பார்க்க முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு வரும், நிர்வாகத் திறனற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக ஆட்சியில் திறந்து வைத்து வருகிறார்கள். நாங்கள் பெற்ற குழந்தைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பெயர் வைத்து வருகிறார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எப்பொழுது ஆட்சி போகுமென மக்கள் பேசி வருகிறார்கள். தினமும் வழிப்பறி, கொள்ளை, பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் நிறைந்துள்ளது. இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை. இதை எத்தனை முறை எடுத்துரைத்தும் திமுக அரசு அதை கண்டு கொள்ளவில்லை. இதற்கு முடிவு கட்ட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-வுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.'' இவ்வாறு அவர் பேசினார்.

''குடும்பத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி திமுக'': சேலம் மாவட்டம், தலைவாசல் வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையிலான கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது: ''குடும்பத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி திமுக கட்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் வாரிசுகள் கிடையாது. இங்கிருக்கும் நாம்தான் வாரிசுகள். குடும்பத்துக்காக பாடுபட்ட கட்சி திமுக, மக்களுக்காக பாடுபட்ட கட்சி அதிமுக.

திமுக-வில் மிட்டா மிராசுதாரர்கள் தான் பதவிக்கு வர முடியும். அதிமுக-வில் சாதாரண தொண்டர் கூட சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதல்வர் என அனைத்து பதவிகளுக்கும் வரலாம். அமைச்சர் துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் இருந்ததாகவும், அதன் பிறகு தற்போதைய முதல்வர் ஸ்டாலினுடன் இருந்ததாகவும், இனி அமைச்சர் உதயநிதியுடனும், அவரது மகன் இன்பநிதியுடனும் இருப்பேன் என்று கூறுகிறார். துரைமுருகன் அனுபவம் எவ்வளவு உள்ளது, அவர் இவ்வாறு பேசி வருகிறார்.

திமுக என்பது அடிமைக் கட்சி. ஆனால், அதிமுக மக்களுக்கான கட்சியாகவும், அடிமட்ட தொண்டருக்கான கட்சியாகவும் விளங்கி வருகிறது. என்னைப் போல லட்சக்கணக்கான தொண்டர்கள், அதிமுக பொதுச் செயலாளராக வருவதற்கு தகுதி உள்ளவர்கள். நான் அனைவரையும் பொதுச் செயலாளராக தான் பார்க்கிறேன். உங்களில் ஒருவனாக நின்று தான் பேசி வருகிறேன். தொண்டனாக இருந்து படிப்படியாக உயர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் பதவிவை அடைந்துள்ளேன். அதிமுகவில் பதவிகள் சரிசமமாக வழங்கப்படும். ஏற்றத்தாழ்வு இருக்காது. பதவி என்பது தோளில் போட்ட துண்டு மாதிரி, பதவியை பெரிதாக நினைக்கக் கூடாது.'' இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x