Published : 02 Apr 2023 04:36 AM
Last Updated : 02 Apr 2023 04:36 AM

மீண்டும் ஊரடங்கு என்பது வெறும் வதந்தி - சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிக்கு முகக் கவசம் அணிவிக்கும் பணியாளர். படம்: ம.பிரபு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதே நேரத்தில், கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற தகவல் வெறும் வதந்திதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2020 மார்ச் மாதம் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றால், இதுவரை 35.96 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,050 பேர் இறந்துள்ளனர். கரோனா தொற்றுடன் இணை நோய்கள் மற்றும் பிந்தைய பாதிப்புகளால் ஏராளமானோர் இறந்துள்ளனர். தொற்றின் முதல், மூன்றாவது அலையைவிட இரண்டாவது அலையில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாகவே இருந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி தொற்று பாதிப்பு, கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அதிகரித்து 150-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் போலவே மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளில் தோராயமாக 2 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்தகட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது.

நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்றினர். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு மருத்துவமனை தரப்பில் இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு பெரிய அளவில் இல்லை. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” என்றனர்.

இதனிடையே, கரோனா தொற்று பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்குபிறப்பிக்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரவி வருகிறது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘கரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது வதந்திதான். அதை யாரும் நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் உண்மை இல்லை’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x