Published : 12 Jul 2014 10:00 AM
Last Updated : 12 Jul 2014 10:00 AM

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை: பேரவையில் அமைச்சர் மோகன் அறிவிப்பு

கடந்த 3 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்கப் படுகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ப.மோகன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய ஊரகத் தொழில்துறை அமைச்சர் ப.மோகன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவுமூப்பை தக்க வைத்துக் கொள்ளவும், அதன்மூலம் வேலை வாய்ப்பை பெறவும் உதவும் வகையில் முதல்வர் உத்தரவின் படி, 2014-15-ம் ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இதனால் சுமார் 1 லட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறுவார்கள்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு பதிவு புதுப்பித்தலுக்கான தற்போதுள்ள கால வரம்பு 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்படும்.

வேகமாக வளர்ந்து வரும் கட்டுமானத் தொழில்களில் பல புதிய கட்டுமான தொழிலினங்கள் உருவாகியுள்ளன. புதிய வகை கட்டுமானத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களையும் உறுப்பினர்களாக பதிவு செய்ய வழிவகை செய்து அவர்களுக்கு பணப்பயன் கிடைக்கும் பொருட்டு 2014-15-ம் ஆண்டில் 1994-ம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத்திட்டத்தில் தற்போது அட்டவணையில் உள்ள 38 வகை தொழில் இனங்களுடன் மேலும் 15 கட்டுமானத் தொழில் இனங்கள் சேர்க்கப்படும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும்.

12 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள வெல்டர், எலக்ட்ரீசியன், வயர்மேன், ஏ.சி.மெக்கானிக் போன்ற தொழிற்பிரிவுகள் தொடங்கப்படும்.

காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்காக புதிதாக பொருத்துநர் தொழிற்பிரிவு நாகர்கோவில், உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொடங்கப்படும்.

தொழிற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியில் மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பு 40-ல் இருந்து 50 ஆக உயர்த்தப்படும். அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மகளிர் சேர்க்கைக்கான வயது உச்சவரம்பு நீக்கப்படும்.

ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடன் அத்திப்பட்டு, பெருங்குடி (மதுரை), திருநெல்வேலி புறநகர், துலுக்கர்குளம் புறநகர், கொண்டாநகரம், நாங்குநேரி புறநகர், மோரூர் ஆகிய புதிய பகுதிகள் இணைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ப.மோகன் அறிவிப்பு வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x