Published : 02 Apr 2023 05:23 AM
Last Updated : 02 Apr 2023 05:23 AM
சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் வார்டுகளை மறுவரையறை செய்வதற்காக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடை பெற்ற விவாதம்:
ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக): திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள வார்டுகளை தேர்தலுக்கு முன் மறுவரையறை செய்ய கோரிக்கை விடுத்தேன். தேர்தல் நடைபெற்றுவிட்ட நிலையில், வார்டுகளுக்கிடையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், மறுவரையறை செய்ய வேண்டும்.
அமைச்சர் கே.என்.நேரு: பல்வேறு நகரங்களில் ஒரு வார்டில் 10 ஆயிரம் வாக்குகள், மற்றொன்றில் 30 ஆயிரம் வாக்குகள் உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகளை அதிகரிக்கவில்லை. ஆனால், தற்போது முதல்வர் அனுமதிபெற்று, வார்டு மறுவரையறைக்காக குழு அமைக்க உள்ளோம்.
மத்திய அரசு ஒரு தொகுதியில் 1.80 லட்சம் முதல் 2.30 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் வகையில் தொகுதியைப் பிரிப்பதுபோல, நகராட்சிகள், மாநகராட்சிகளில் மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் நிர்ணயிக்கப்பட்டு, அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் பிரிக்கப்படும்.
சென்னை, கோவை மற்றும் இதர மாநகராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் வார்டு மறுவரையறையின்போது, கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும், தந்தை-மகன் வெவ்வேறு வார்டிலும் இருக்கும் சூழல் உள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு, ஒரு கூட்டுக் குடும்பம், ஒரே வார்டில் வாக்களிக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
அமைச்சர் கே.என்.நேரு: ஒரு ஊரில் செல்வாக்கானவர் ஒருவர் இருந்தால், அவர் ஒரு வார்டிலும், மனைவியை வேறு வார்டிலும் போட்டியிடச் செய்து, வெற்றி பெறும் சூழல் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டகுழு அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவால்தான் தேர்தல் நடத்தப்பட்டது.
சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி: தேர்தல் நேரத்தில் வார்டுகளைப் பிரிப்பதால், நீதிமன்றத்தில் தடையைப் பெறுகின்றனர். எனவே, இப்போதே குழு அமைத்து வார்டுகளைப் பிரிக்க வேண்டும்.
அமைச்சர் கே.என்.நேரு: கடந்த ஆண்டு 6 நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. அப்போது மாநகராட்சியைச் சுற்றியுள்ள ஊராட்சிகளையும், நகராட்சிகளையும் மாநகராட்சியுடன் இணைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஊராட்சிகளில் தேர்தல் முடிந்து தலைவர்கள் பதவியேற்ற நிலையில், இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, அனைவரும் இணைந்து, உரிய முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT