உதகை குதிரை பந்தயத்தில் நீலகிரி முனிசிபாலிடி கோப்பையை ராயல் ஐகான் வென்றது

உதகையில் தொடங்கிய குதிரை பந்தயத்தில் எல்லைக்கோட்டை தொட சீறிப்பாய்ந்து ஓடிய குதிரைகள். படம்: ஆர்.டி.சிவசங்கர்
உதகையில் தொடங்கிய குதிரை பந்தயத்தில் எல்லைக்கோட்டை தொட சீறிப்பாய்ந்து ஓடிய குதிரைகள். படம்: ஆர்.டி.சிவசங்கர்
Updated on
1 min read

உதகை: உதகை குதிரை பந்தயத்தில் நீலகிரி முனிசிபாலிடி கோப்பையை ராயல் ஐகான் குதிரை தட்டி சென்றது.

நீலகிரி மாவட்டத்தின் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயங்கள் உதகையில் நேற்று தொடங்கின. ஆண்டு தோறும் கோடை சீசனின் போது நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரை பந்தயங்கள் ஏப்.14-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.

ஆனால், இந்தாண்டு 136-வது குதிரை பந்தயம் முன்கூட்டியே ஏப்.1-ம் தேதியான நேற்று தொடங்கியது. இந்தாண்டு மே 28-ம் தேதி வரை 17 நாட்கள் குதிரை பந்தயங்கள் நடக்கின்றன. இதற்காக பெங்களூரு, சென்னை, புனே உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து 650 பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 24 குதிரை பயிற்சியாளர்கள் மற்றும் 37 ஜாக்கிகள் பந்தயங்களில் கலந்துக் கொள்கின்றனர்.

முக்கிய பந்தயங்களான ‘நீலகிரி டர்பி’ மற்றும் டாக்டர் எம்ஏஎம் ராமசாமி நினைவு கோப்பை மே 14-ம் தேதியும், ‘நீலகிரி தங்க கோப்பை’ மற்றும் ‘ஊட்டி ஜூவைனல் ஸ்பிரின்ட் கோப்பை’ மே 21-ம் தேதியும் நடக்கின்றன. இந்தாண்டு கோப்பைகள் மற்றும் பரிசு தொகையாக ரூ.6.70 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளான நேற்று 8 போட்டிகள் நடத்தப்பட இருந்தன. முதல் போட்டியில் சாண்டாமரினா ஸ்டார் குதிரை வெற்றி பெற்றது. அடுத்து நடந்த நீலகிரி முனிசிபாலிடி கோப்பைக்கான போட்டியில் 10 குதிரைகள் பங்கேற்றன.

இதில், ராயல் ஐகான் குதிரை வெற்றி பெற்றது. குதிரையின் உரிமையாளரான எம்.ஏ.எம்.ராமசாமி அறக்கட்டளைக்கு ரூ.3 லட்சத்து 71 ஆயிரத்து 250, பயிற்சியாளர் பி.சுரேஷூக்கு ரூ.45 ஆயிரம் மற்றும் ஜாக்கி சி.உமேஷூக்கு ரூ.33,750 பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

உதகை நகராட்சி ஆணையர் எம்.காந்திராஜ் வெற்றி பெற்ற குதிரையின் பயிற்சியாளர் மற்றும் ஜாக்கிக்கு கோப்பையை வழங்கினார்.

இந்நிலையில், நேற்று பகல் 12 மணியளவில் திடீரென கோடை மழை பெய்யத் தொடங்கியது. மழை காரணமாக வெல்கம் கோப்பைக்கான 7 மற்றும் 8-ம் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. குதிரை பந்தயங்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in